பேழை
     
  • கி.மு.
  • சோழர்கள்
  • சேரர்கள்
  • பாண்டியர்கள்
  • யாழ்ப்பாணம்
  • இசை
  • பழமொழிகள்
  • நூல்கள்
  • தமிழ்மொழி
  • அளவீடுகள்
  • புலவர்கள்

தமிழ் மொழியின் சிறப்பைக் கூறும் மேற்கோள்கள்

தமிழ்மொழி

1. தமிழ்மொழி இலக்கியத்தின் நிலைக்களன்;
இசையில் இனிய ஊற்று; நாடகத்தின்
நலங்கொழிக்கும் நன்மொழி!
- பேராசிரியர் க. அன்பழகன்
2. பாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்
- பாரதியார்
3. காடுறையும் விலங்காண்டி மாந்தரேனும்
அருமையுறும் தனித்தமிழை விரும்புவாரேல்
அவரன்றோ தலையாய தமிழர் கண்டீர்
- பாவாணர்
4. தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்கு சுடர் தந்த தேன்!
- பாவேந்தர்
5. தமிழில் வழங்கும் அறத்துறை இலக்கியங்கள்
(Ethical Poetry) போன்று
6. தமிழன் என்றொரு இனம் உண்டு!
தனியே அவர்க்கொரு குணம் உண்டு!
- நாமக்கல் கவிஞர்
7. சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - அதைத்
தொழுது படித்தடடி பாப்பா
- பாரதியார்
8. தமிழ்மொழியில் வரும் சுட்டு வினாப் பெயர்களின்
அழகான, தத்துவார்த்தமான ஒழுங்கு முறை உலகில்
வேறு எம்மொழியிலும் இல்லை.
- ராபர்ட் கால்டுவெல்
9. தீங்கு நேர்ந்திடில் தமிழர்க்கே - இந்தத்
தேகம் இருந்தொரு லாபமுண்டோ?
- பாவேந்தர்
10. எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெருந்
தமிழ் அணங்கே! உன் சீரிளமைத் திறம் வியந்து
செயல் மறந்து வாழ்த்துவோம்.
- பேராசிரியர் சுந்தரம்பிள்ளை
11. வீறுடைய செம்மொழி தமிழ்மொழி!
உலகம் வேரூன்றிய நாள் முதல் உயிர்மொழி!
- பெருஞ்சித்திரனார்.
12. தமிழுக்கு நிலவென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்
- பாவேந்தர்
13. இறவாத புகழுடைய புது நூல்கள்
தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை
-பாரதியார்
14. உலகின் தலைச்சிறந்தனவாகக் கருதப்படும் ஆறு
செம்மொழிகளுள் உயிர்ப்போடும், ஊட்டத்தோடும்,
ஒட்போடும், நீடி நின்று, நிமிர்ந்தெழுந்து நடை சிறந்து
இயங்கி வருவது நம் செந்தமிழ் மட்டுமே!
- பொருளாய்வு அறிஞர் அருளி
15. கூறுபடும் மொழிகளைப் போல் புதையவில்லை
கொஞ்சிப் பேசும் வழக்கற்றுக் குமையவில்லை
சாறுபட்ட மரங்களைப்போல் சாயவில்லை
தரங்கெட்ட மனிதர்களைப்போல் தாழவில்லை
- பெருஞ்சித்திரனார்
16. தமிழ் என்று தோள் தட்டி ஆடு - நல்ல
தமிழ் வெல்க வெல்கவென்றே தினம் பாடு
- பாவேந்தர்
17. ஒரு விழுக்காட்டுக்கு குறைவாகவே தமிழில்
பிறமொழிச் சொற்கள் கலந்துள்ளன.
- கால்டுவெல்
18. தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்
- பாரதியார்
19. இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்கு
இன்பந்தரும்படி வாய்த்த நல் அமுது!
- பாவேந்தர்
20. மலையிடைப் பிறந்து, மாந்தர் தொழ உயர்ந்து
உலகின் இருளைப் போக்கும் ஆற்றல் பெற்ற அரிய சக்தி
இரண்டு மட்டுமே! ஒன்று செங்கதிர், மற்றது செந்தமிழ்!
- தண்டியலங்காரம்
21. ஆண்டு நூறானாலும் அன்னைத் தமிழ்நாடு
வேண்டும் - விடுதலை எண்ணம் விலக்கோம் யாம்!
- பெருஞ்சித்திரனார்
22. ஒருவனது மொழியை அவனது தாய்மொழி என்று
அழைப்பது வெறும் அழகுக்காக அல்ல. அது பல்லாற்றானும்
தாயினும் சிறந்தது என்பதால்தான்!
- பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை
23. கெடுதல் எங்கே தமிழின் நலம் - அங்கெல்லாம்
தலையிட்டுக் கிளர்ச்சி செய்க!
- பாவேந்தர்
24. சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செய்தல் வேண்டும்!
- பாரதியார்
25. ஒலி அமைப்பிலும், பிறமொழிச் சொற்களைத் தன்னில்
கலக்க விடாத தூய்மை பேணலிலும் நிலையாக இருப்பதால்
தமிழ் கன்னித் தமிழாகும்.
- கால்டுவெல்
26. தனிமைச் சுவையுடைய சொல்லை - எங்கள்
தமிழினும் வேறெங்கும் யாம் கண்டதில்லை!
- பாவேந்தர்
27. தமிழின் தொன்மையை உலகுக்கு அறிவித்த பெருந்தகை
கால்டுவெல், தனித்தமிழுக்கு வித்திட்டார் பரிதிமாற்கலைஞர்
செடியாக செழிக்க வைத்த செம்மல் மறைமலை அடிகள்
மரமாக வளர்த்து மாண்புறச் செய்தவர் தேவநேயப் பாவாணர்
28. இருப்பாய் தமிழா நெருப்பாய்! இதுவரை
இருந்தது போதும் செருப்பாய்!
- கவிஞர் காசி ஆனந்தன்
29. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்!
- பாரதியார்
30. தமிழ் என்னும் சொல் வல்லோசை, மெல்லோசை, இடையோசை
சிறந்து இணைந்திருத்தலால் அம் மூவினமும் சேர்ந்த
தமிழ் என்னும் சொல் தனிச் சொல்லே ஆகும். திரிபு அன்று
- கால்டுவெல்
31. தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத்
தமிழ் நல்ல புலவர்க்கு வேல்
- பாவேந்தர்
32. பலமொழிகட்குத் தலைமையும், மிக்க மேதமையும் உடைய
மொழி உயர்மொழி, தனித்து இயங்க வல்ல ஆற்றல் சார்ந்தது
தனிமொழி. திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய
தூய்மொழி செம்மொழி. ஆயின் தமிழ் உயர் தனிச் செம்மொழியாம்
- பரிதிமாற் கலைஞர்
33. ஆங்கிலேயரின் இதழ் நயத்திற்கும், செவி நுட்பத்திற்கும்,
அபிருசிக்கும் அந்த பாஷையைப் (தமிழ்) போல் எந்த
பாஷையும் ஒத்து வருவதில்லை
34. தமிழ் எங்கள் உயிர் என்பதாலே - வெல்லுந்
தரமுண்டு தமிழர்க்கு இப்புவி மேலே!
- பாவேந்தர்
35. தமிழ், தமிழ்மொழியாய், தமிழ்த் தாயாய், தமிழ்நாடாய்,
நாட்டு மக்களாய், மக்களின் வாழ்வாய் வாழ்வின் மலர்ச்சியாய்
வளர்ந்து பொங்கிப் பெருகி வழிந்தோட வேண்டுமெனில்
தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்தல் வேண்டும்
- கா. அப்பாத்துரை
36. தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!
- பாவேந்தர்
37. கீழையுலக மொழிகட்கு மூலமாகவும், மேலையுலக மொழிகட்கு
மூச்சாகவும் தமிழ் உள்ளது. உலக மொழிகட்குத் தாயாக
இருக்கின்ற அந்த மூல மொழியே தமிழாக வளர்ந்துள்ளது.
எனவே தமிழை முதற்றாய் மொழி எனலாம்
- மொழி ஞாயிறு பாவாணர்
38. எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லையயன்றால்
இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும்!
- பாவேந்தர்
39. ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழையும் முன்னர், இந்தியா
முழுதும் பரவியிருந்தவர்கள் திராவிடர்கள். அவர்கள்
எகிப்து, மெசபடோமியா நாடுகளோடு வணிகம் செய்து
வாழ்ந்த பழைய நாகரிகத்துக்கு சொந்தக்காரர்கள்
- ஜவகர்லால் நேரு
40. வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய்கின்ற
தமிழ் எங்கள் மூச்சாம்
- பாவேந்தர்
41. தாய்மொழி வழிக்கல்வி என்பது தமிழின் முக்கியத்துவம்
சார்ந்ததோ, மொழித்துறை சார்ந்த பிரச்சினையோ அன்று.
அது தமிழர் மேம்பாடு சார்ந்த பிரச்சினை.
42. இன்பத்தமிழ்க்கல்வி யாவரும் கற்றவர்
என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால்
துன்பங்கள் நீங்கும், சுகம் வரும் நெஞ்சினில்
தூய்மையுண்டாகிடும், வீரம் வரும்!
- பாவேந்தர்
43. மம்மி என்றது குழந்தை; அம்மா என்றது கன்று!
ஆங்கிலம் கலந்து தமிழ் பேசாதே!
அன்னை முகத்தில் கரி பேசாதே!
சூடு சொரணை கொஞ்சமும் இல்லை;
சொல்லடா நீயா தமிழனின் பிள்ளை?

44. எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
- பாவேந்தர்
45. தேவையின்றிப் பிறமொழிச் சொற்களைத் தமிழில் கலப்பதை
வேண்டுமென்றே ஆதரிப்பதும், தமிழுக்குரிய சிறந்த வரி வடிவத்தைச்
சிதைத்து இழி வழக்குகளை எழுத்து மொழியில் புகுத்துவதும்
தமிழ்ப் பகைவர் செயலாகும்.
- பாவாணார்
46. தொண்டு செய்வாய் தமிழுக்கு
துறை தோறும், துறை தோறும் துடித்தெழுந்தே!
- பாவேந்தர்
47. உலகமயச் சுரண்டலின் ஒரு கூறாகவும், பொருளியல்
பண்பாடு ஆகியவற்றுடன் தமிழ் மொழியும் ஆங்கிலத்தால் அழிக்கப்படுவதால்
மொழியளவில் மட்டும் முயற்சி மேற்கொள்வது நிழலுடன் போராடுவதாகும்
மரபு வழிப் பொருளியலை வளர்ப்பது, உலகமயமாக்கலின்
அழிவு சார் கூறுகளை எதிர்ப்பதுமே பயன் விளைக்கும்
- தமிழறிஞர் இறைக்குருவனார்
48. எங்கள் தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச் சொல்லித்
தலைமுறைகள் பல கழித்தோம்; குறை களைந்தோமில்லை
தகத் தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர்!
- பாவேந்தர்
49. தமிழின் 16 வகைச் சிறப்பு
தொன்மை, முன்மை, மேன்மை, எண்மை, ஒண்மை, வண்மை, வாய்மை,
தூய்மை, செம்மை, மும்மை, தனிமை, இனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை
- பாவாணார்
50. என்றும் தமிழ் வளர்க - கலை
யாவும் தமிழ் மொழியால் விளைந்தோங்குக!
இன்பம் எனப்படுதல் - தமிழ்
இன்பம் எனத் தமிழ் நாட்டினர் எண்ணுக!
- பாவேந்தர்
தகவலுக்கு நன்றி : க. நாகராஜன்

« சங்க காலப் பெண்பாற் புலவர்கள்
  • அகரவரிசை
  • எழுத்துக்கள்
  • எழுதி
  • களஞ்சியம்
  • கிரந்தம்
  • சொல்லாட்டம்
  • கலைச்சொற்கள்
  • வினாவல்
  • பேழை
  • திருக்குறள்
  • திரட்டுகள்
  • சுருக்கச் சொற்கள்
  • எண்கள்
  • அளவைகள்
மேலே செல்ல ↑

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.