பண்டைத் தமிழகத்தில் இருந்த சோழநாட்டின் மன்னர்களுள் ஒருவன். இவன் உருவப் பல்தேர் இளஞ்சேட்சென்னி என்றும் அழைக்கப்படுகிறான். கி.பி 3 ஆம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்தவன் ஆதலால் இவன் முற்காலச் சோழ அரசர்கள் வரிசையில் உள்ளவன். இம் மன்னனைப் பற்றிக் கிடைக்கப்பெற்ற தகவல்கள் சங்க இலக்கிய நூல்களிலிருந்து கிடைக்கப் பெற்றவையே. புறநானூற்றிலும், அகநானூற்றிலும் இவனைப் பற்றிய பாடல்கள் உள்ளன. புறநானூற்றில், கி.பி முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படும், பரணர் என்னும் புலவரும், கழாத்தலையார் அல்லது பெருங்குன்றூர் கிழார் என்பவரும் இவனைப்பற்றிப் பாடியுள்ளனர்.
கொடையிலும், போர்த் திறத்திலும் புகழ் பெற்றிருந்தான். வம்பர், வடுகர் ஆகியோரை முறியடித்தவன் என இவனைப் பற்றி அகநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது இம் மன்னனுடைய குதிரைப் படை, யானைப் படை என்பன பற்றிய குறிப்புக்களைத் தருகின்ற புறநானூற்றின் நான்காம் பாடல், அவன் குதிரைகள் பூட்டிய தேரில் வரும் காட்சியை சிவந்த சூரியனுக்கு உவமையாகக் கூறுகின்றது. இவன், அழுந்தூர் வேளிர் குல இளவரசி ஒருத்தியை மணந்தான். இவ்விருவருக்கும் பிறந்தவனே, முற்காலச் சோழர்களுள் புகழ் பெற்றவனும், கூடுதலாக அறியப்பட்டவனுமான கரிகால் சோழன். கரிகாலன் தாய் வயிற்றில் இருக்கும்போதே இளஞ்சேட் சென்னி இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இவன்காலத்துப் பிற மன்னர்கள்
வெல்கெழு குட்டுவன் என்ற சேர மன்னனும், பாண்டிய மன்னன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி என்பவனும் இளஞ்சேட் சென்னியின் சமகாலத்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்.